பின் தொடரரும் நண்பர்கள்

Sunday, August 21, 2011

மருந்தால் தீராதது மந்திரத்தில் தீருமா?????????????

             பகுத்தறிவு வாதிகள் என்றால் எதையும் பகுத்து அறிந்து பிறகுதான் நம்புகிறவர்கள்.  ஆனால் நம்பிக்கை சார்ந்த எல்லா விஷயங்களுக்கும் சான்றுகள் இருப்பதில்லை. கடவுளை இங்கே வரச்சொல் நான் பார்க்கிறேன் என்றால் அது நடக்காத காரியம் தானே. மூட நம்பிக்கைகள் சிலரின் வாழ்வை வளமாக்கவும் பலரின் வாழ்வை குலைக்கவும் செய்கிறது என்பதும் உண்மையே.

                பகுத்தறிவுவாதி அறிவியல்வாதிகளைப்போல் சோதனைக்கூடம் அமைத்து கருவிகள் கொண்டு சோதனைகள் செய்யாமல் இருக்கலாம்.      ஆனால் இவர்களின் அடிப்படை மனப்பான்மை ஒன்றேயாகும் எதையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளுதல். . அறிவியலுக்கு இன, நிற,மொழி,மத, வேற்றுமைகளோ நாட்டுப்பற்று என்ற வேற்றுமைகளோ அவர்கள் பார்த்ததில்லை. விஞ்ஞான அறிவு எந்த ஒரு நாட்டுக்கும் ஏக போக உரிமையன்று. இன்று விஞ்ஞானத்தை உலகம் முழுவதற்க்கும் சொந்தமாக்கினர். அறிவியல்வாதி இயற்கை மறைத்து வைத்திருக்கும் இரகசியத்தை ஆற்றலை,உண்மையை கண்டறிய இயற்கையை குறுக்கு விசாரணை செய்தான் பகுத்தான் புதியவற்றை படைத்தான்.

               அதற்க்காக அவர்கள் கொடுத்த விலைகள் அதிகம்.  அரசியல்வாதிகள், மன்னர்கள்,மதபோதகர்கள் இவர்களை படுத்திய கொடுமைகள் கணக்கிலடங்கா. புருனோவை உயிருடன் பொசுக்கி கொன்றனர். ஹைப்போஷியா அம்மையாரை உடலை பிய்த்து சாகடித்தனர், கலிலியோவை ஒவ்வொரு அணுவாக சாகடித்து இறுதியில் உயிரை குடித்தனர். இவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டுபிடித்தனர்


                   குழந்தையை கொல்லும் டிப்தீரியா என்ற நோய்க்கு மருந்தினைக்கண்டவர் Dr.ரோக்ஸ். இவர் தனக்கு அளிக்கப்பட்ட 4000 பவுன்களை தன் ஏழ்மையான நிலையிலும் தான் பணியாற்றிய நிறுவனத்திற்கே நன்கொடையாக் கொடுத்தார். இன்னும் எண்ணிலடங்கா மருந்துகளையும், புதிய கண்டுபிடிப்புகளை இந்த மானுட குலத்திற்க்கு தந்ததை மறுக்கவும் மறைக்கவும் முடியாது என்பதுதான் அவன் கூற்று அது எல்லாம் சரிதான். அதனால் நாம் விஞ்ஞானிகளை குறை கூறலாகாது.


        அடுத்து பகுத்தறிவுவாதிகளைப்ப்பார்ப்போம். இவர்கள் மக்களின் இறை நம்பிக்கையையும், முட நம்பிக்கைகளையும் களைவதாக கூறி இன்று ஆசியாவிலேயே தொடமுடியாத அளவிற்க்கு பணம் சேர்த்துவிட்ட போலி பகுத்தறிவுவாதிகளை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். இவர்கள் மக்களிடம் இறைவன் மற்றும் அது சம்பந்தப்பட்ட எல்ல விஷயங்களும் மூட நம்பிக்கைதான் என்பதை மிகவும் அழகாக நம்பும் படி எடுத்துரைப்பதில் வல்லவர்கள். ஆனால் அவர் மனைவியே கூட கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதை நாம் அன்றாட வாழ்வில் காணமுடிகிறது.  அதன் பெயரில் இன்றய பகுத்தறிவுவாதிகள் செய்யும் பித்தலாட்டங்கள் அதைவிட மோசம்.   இறைவனை மறுத்தவர்களும் கோடிகளில் புரள்கிறார்கள், இறைவனை சொல்லி பணம் கறப்பவர்களும் கோடிகளில் புரள்கிறார்கள்.


              எனக்கும் அமானுஷ்யம்,ராகுகாலம், எமகண்டம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லைதான்.  அதுவும் இன்றய ஆன்மீகவாதிகளின் போக்கை பார்க்கும்போது பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான்  சால சிறந்தது என்று தோன்றாமல் இல்லை. பக்தி என்ற பெயரில் அவ்வளவு ஆபாசங்கள் நடந்தேறுகின்றன. இதில் மருந்து வைத்தல் (வசியம் பண்ணுவதற்க்காம்)செய்வினை செய்தல்  என்று ஒரு கோஷ்டியினர் மருந்தை எடுக்கிறேன் என்று இன்னொரு தரப்பும். மருந்து எடுத்தார்கள் பார்த்தேன் அதில் மயிர் முளைத்து இருந்தது, அப்படி இப்படி என்று பில்டப் வேறு .இதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கையோ உடன்பாடோ இருந்ததில்லை. அது சாத்தியம் என்றால் தொழிலில் இவ்வளவு போட்டி எதற்க்கு பேசாமல் ஒரு மந்திரவாதியை வைத்து செய்வினை வைத்தால் போதுமே என்று கூட நினைத்ததுண்டு. இந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு சம்பவம் நேர்ந்தது.


                   திடீரென்று என் கை விரல் நுனியிலும் கால் விரல் நுனியிலும் ஒரு புள்ளி போன்று ஒரு புண் வரும் பிறகு பழுத்துவீங்கி செப்டிக்காகி  பெரும் தொந்திரவாக இருந்தது. எனக்கு தெரிந்த எல்லா சிறப்பு தோல்மருத்துவர்களையும் பார்த்தேன்.  முதல் இரண்டு சிட்டிங் வரை என் நோயை கேட்க அவர்களுக்கு நேரம்இல்லை. மனதும் இல்லை.அனைவரும் படு பிஸியாக் இருந்தனர். ஆனால் பிரச்சனை விரலில் என்றாலும் வழக்கம் போல் தலைக்கு ஷாம்பு முதல் சோப்பு, கிரீம், லோசன்( அதன் விலைகளைப்பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை)  என அனைத்து அழகு சாதன பொருட்களையும் தந்ததனர். நானும் காலை முதல் மாலை வரை படுசிரத்தையாக இதை உபயோகிப்பதை மட்டுமே வேலையாக கொண்டிருந்தேன். ( அவர் சொன்னபடி செய்தால்,அப்படிதான் செய்ய முடியும் எனவே வேறு வேலைகள் செய்ய சாத்தியமில்லாமல் போனது) . ஆனாலும் ஒரு முன்னேற்றமும் இல்லை. மருந்த உண்ட 15 நாட்கள் ஒன்றும் இருக்காது ஆனால் மறுபடியும் பிரச்சனை ஆரம்பித்துவிடும். இப்படியே ஒரு வருடம் ஓடியது ஒரளவு எல்லா மருத்துவர்களும் என்னை கண்டவுடன் அறியும் அளவிற்க்கு அவரின் வாடிக்கையாளராகிவிட்டேன்( அதற்க்காக கொடுத்த விலை மிக மிக அதிகம்). ஒரளவு மருந்துகளும் எனக்கு அத்துபடி ஆனது. ஆனால் என் பிரச்சனை எப்படி இருந்ததோ அப்படியே ஒரு இம்மியும் மாற்றமில்லை. நானும் செய்வதறியாமல் திகைத்தேன். அப்பொழுதான் என் நண்பன் வந்து இவ்வளவு நாள் நோய்க்கு பார்த்தாய் இனி ஒரு தடவை பேய்க்கும் பார்ப்போம் என்றான் (????????!!!!!!!) .

                  நான் முதலில் பயந்தேன்..... மறுத்தேன்............ஆனாலும் இன்னும் பலரின் வற்புறுத்தலால் சம்மதித்தேன். மறுநாள் கேரளாவில் உள்ள ஒரு “அம்மா” விடம் சென்றோம். அவர்கள் முன் இருந்தேன். அவர்கள் குடும்பம் மற்றும்தொழிலைப்பற்றி நிறைய விஷயம் சொன்னார்கள் அதெல்லாம் எனக்கு மனதில் ஏறவே இல்லை . என் மனது என் நோயைப்பற்றியதாகவே இருந்ததால் அதை மட்டுமே எதிர்பார்த்தேன். அவர்களும் யாரோ எனக்கு ”கைவிஷம்” (அதென்ன கைவிஷம் கால் விஷம்???????)வைத்திருப்பதாக சொன்னார்கள். நான் முகத்தை மிகவும் சீரியசாக வைத்திருந்தாலும் மனதுக்குள் சிரித்தேன். நான் என் வீட்டைத்தவிர எங்கும் உண்பதே இல்லை. வேறு மாதிரி எந்த பிரச்சனையும் எனக்கில்லை. எனக்கு யார் தருவார்கள் என்று இறுமாப்புடன் இருந்தது என் மனது. சரி நான் என்ன செய்ய வேண்டும் என்றேன். ஒரு நாள் குறித்து ஒரு ஹொமம் செய்ய வேண்டும் என்றார்கள் அதையும் செய்தேன்.  பிறகு ஒரு வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குள் ஒன்றும் சாப்பிடாமல் வெறும்வயிற்றுடன் வரவேண்டும்( வெறும் வயிறுமட்டும் தனியா எப்படி வரும்ன்னு அதிகபிரசங்கித்தனமா கேட்கக்கூடாது). நான் முந்தைய நாள் இரவே ஒன்றும் சாப்பிடவில்லை. என்னதான் நடக்கிறது என்றுதான் பார்ப்போமே என்றது என் மனம். சொன்னபடி சென்றேன் ஒரு கப்பில் டீ போன்ற ஒரு திரவத்தை குடிக்க சொன்னார்கள். குடித்தால் வாந்தி வரும் அதில் எல்லா ”ஐட்டமும்” போய்விடும் என்றார்கள்.  நானும் அதை முகர்ந்து பார்த்தேன் ஒரு கசப்பான வாடை வந்தது ரொம்ப கசப்பாக இருக்கும் என நினைத்து மடக் ... மடக்.... என்று குடித்துவைத்தேன் ஆனால் கசக்கவில்லை.  15 நிமிடம் ஆகியும் வாந்தி வரும் ஒரு அறிகுறியும் இல்லை.( உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தால் வந்தால் வாந்தி வரப்போகிறது என்று அறிகுறியாம்).  இரண்டாவதாக 1 டம்ளர் குடிக்க கொடுத்தார்கள். குடித்தேன். சிறிது நேரத்தில் மிகவும் மோசமான நாற்றத்துடன்வெளுத்து வாங்கியது வாந்தி.  உண்டாகியிருக்கும் பெண்கள் கூட தோற்றுவிடுவார்கள் அப்படி ஒரு வாந்தி  அது என் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு வழியாக வாந்தியும் ஓய்ந்தது கூடவே நானும். அந்த அம்மாவின் சீடன் நான் எடுத்த வாந்தியை விசிட் செய்தான்( இப்போ உங்களுக்கும் வாந்தி வருது தானே.........).  எதோ திரைந்து போனமாதிரி ஒரு ஐட்டம் இருந்தது (இதுவும் எனக்கு ஆச்சர்யம் தான்) முட்டையில் தந்திருக்கிறார்கள் என்று ஒரு சர்டிபிகேட்டையும் தந்தான்.  இனி ஒரு பிரச்சனையும் இருக்காது நீங்கள் போகலாம் என்றார்கள்.
                   
                       அதிலிருந்து 2 நாட்கள் கழிந்து நல்ல மாற்றத்தை உணர்ந்தேன்.  15 நாட்களில் முற்றிலும் குணம் ஆனது. இப்போழுது ஒரு வருடம் தாண்டிவிட்டது ஒரு பிரச்சனையும் இல்லை.  அதோடு நான் அங்கு போவதையும் நிறுத்திவிட்டேன்.  இதை என்னால் நம்பவும் முடியவில்லை. நானே சாட்சியாக இருப்பதால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 


             இந்த பதிவு மூடபழக்கவழக்கதிற்க்கு வக்காலத்து வாங்கும் பதிவு அல்ல. என் நோக்கமும் அது அல்ல. அதனால் தான் அவர்கள் பற்றிய எந்த தகவலும் நான் சொல்லவில்லை. இது என்னுடைய ஒரு அனுபவம் அதை பதிவு பண்ணவேண்டும் என்று தோன்றியது. அவ்வளவுதான்.


Thursday, August 11, 2011

”பெரிசுகள்” வீட்டிற்க்கு தேவையா..........????????????

       முதியோர்கள் வீட்டில் இருப்பதை பெரும்பாலோர் சுமையாகவும், சிலர் துணையாகவும் கருதுகிறார்கள். யதார்த்தத்தில் முதியோர்கள் வீட்டில் இருப்பது ஒரு மங்கல விஷயமாகவே கருத வேண்டும்.வீட்டில் உள்ள முதியவர்கள் தெய்வத்திற்க்கு சம்மானவர்கள்  நாகரீகம் வளர்ச்சி பெற்றவிட்டதாக கருதப்படும் அமெரிக்காவில் முதியோர் இல்லங்கள் அதிகம். அங்கு பிள்ளைகளை பெற்றோர்கள் பாசத்தை ஊட்டி வளர்ப்பதில்லை.  விளைவு முதியோர் இல்லங்களே இவர்களின் சரணாலயங்காளாகின்றன.

             நம்மூரிலும் முதியோர் இல்லங்கள் சமீபகாலமாக தலைதூக்க ஆரம்பித்துள்ளன. அப்படி என்னதான் பிரச்சனை முதியோர்களிடம். மிகவும் உன்னிப்பாக பார்ப்போமேயானால் அவர்களுக்கு முதுமை காரணமாக அடிக்கடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுகிறது. அந்த மருத்துவச் செலவு நம்முடைய வரவு செலவை பாதிக்கலாம்.

              முதியவர்கள் நாம் ஓய்வெடுக்கும் காலம் என்று சும்மா இருக்கமாட்டார்கள்.  அவர்களுக்கு தேவையில்லாத(அப்படி நாம் கருதுகிற) விஷயங்களில் தலையிட்டு அவரது அபிப்ராயங்களை திணிக்கலாம். அதை நீங்கள் செவிமடுக்காவிட்டால் அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கலாம். 

                 தன்னுடையவாழ்வின் இறுதியை நோக்கி போய்கொண்டிருப்பவர்கள் அந்த பயத்தில் அவர்களின் ஆசைகளை அவசரமாக நிறைவேற்றும் பொருட்டும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.

               இது நமக்கு மன உளைச்சலைத் தந்தாலும் அவற்றை அனுதாபத்தோடு பரிசீலிப்பது மிகவும் அவசியமானது.  ஒரு காலத்தில் நாமும் அந்த நிலைக்கு தள்ளபடுவோம் என்பதை நினைத்துக்கொண்டால் அவர்களை புண்படுத்த தோன்றாது.
            மற்றொரு விஷயம் அவர்கள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து நிறைய நன்மை தீமைகளை அனுபவித்துள்ளார்கள். அதை கண்டிப்பாக நாம் பெற்றிருக்க மாட்டோம். எனவே அவைகள் நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வாய்ப்பு உண்டு.  ஒரு தடவை அவர்கள் சொல்வதையும் கேட்பதினால் நாம் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டோம். அவ்வாறு கேட்பது அவர்களுக்கும் ஒரு ஆத்ம திருப்தியை கொடுக்கும்.

             வீட்டில் இருக்கும் முதியவர்கள் உடல் நிலை குன்றி இருந்தாலும் ஆன்ம பலம் மிக்கவர்கள். அவர்கள் வீட்டில் இருப்பதால் அவர்களுடைய ஆன்ம பலம் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையாமாகவே செயல்படும்.

              தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்கிற வரிகள் உங்களை வழிநடத்தும் உன்னத வரிகள என்பதை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு வயதாகிவிட்டதால் அது பொய்யாகிவிடுமா என்ன ?.
               

Thursday, August 4, 2011

ஊர் சுற்றலாம் வாங்க - பாங்காங்க் (தாய்லாந்து)

முதலில் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்த SONY INDIA  நிறுவனத்துக்கும் அதற்க்கு காரணமாக இருந்த திரு. வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

         நண்பர் வினோத்(vivek computers, trichy)  தாய்லாந்து டூர் செல்ல இருப்பதாகவும் உங்களுடைய கடவுச்சீட்டை உடனடியாக அனுப்பவும் என்று சொன்னவுடன் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது. ஆனால் இதை என் நண்பர்களுக்கு சொன்னவுடன் ஒரு புன்சிரிப்போடு “நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட” என்றார்கள் என்றார்கள் என்னை அறிந்தவர்கள்.  நானும் அப்படி என்னதான் இருக்கிறது அங்கே என்று  அங்கு போய் வந்த என் நண்பனிடம் விசாரித்தபோதுதான் தாய்லாந்தில் பட்டாயா என்ற இடம் “ அதுக்கு” பெயர் போனது என்று தெரியவந்தது. “அது” எது என்று புரியாத நல்லவர்கள் மசாஜ் என்று திருத்தி படிக்கவும்.  அந்த கருமத்திற்க்கு BHOOM ...BHOOM என்ற அடைமொழி வேறு.

பார்த்தாலே தெரியலையா நம்ம மதுரை விமான நிலையம்தான்.
              ஒரு வழியாக மதுரையில் இருந்து மற்ற நண்பர்களுடன் spice jet விமானத்தில் (  சன் குரூப்பின் வளர்ச்சி) ஏறினோம்.  சில பயணிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் தலைமீது இருந்த அத்தனை பட்டன்களையும் அழுத்தி பரிசோதித்துக்கொண்டிருந்தனர்.  விமானம் டேக் ஆஃப் ஆனதும்  என் பக்கத்தில் இருந்த ஒரு இளம் வயது பெண் கண்ணை இறுக மூடிக்கொண்டே பயங்கரமாக ஜெபித்துக்கொண்டிருந்தாள்.

       நான் புதிதாக பயணம் செய்பவராக இருக்கும் என்று நினைத்தேன் விபரம் புரியாமல். சிறிது நேரத்தில் அவரும் கண்ணை திறந்தார்.  10 நிமிடம் கழித்து மோசமான காலநிலை இருப்பதாகவும் அதனால் எல்லோரும் சீட் பெல்டை அணியுமாறும் கேப்டன்( விஜயகாந்த் அல்ல விமான ஓட்டி)கேட்டுக்கொண்டார். விமானம் தீடீரென்று ஜல்லி ரோட்டில் செல்லும் மாட்டு வண்டி மாதிரி குலுங்கியது. அந்த பெண்ணின் பிரார்த்தனையின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது சன் குரூப் அல்லவா??.  ஆனாலும் விமான பணிப்பெண்கள் அசராமல்100 ரூபாய்க்கு  சாண்ட்விஜ் விற்றுக்கொண்டிருந்த அந்த கடமை உணர்வை பாராட்டியே தீரவேண்டும்.

bangkok
விமான நிலையம் நம்ம ஊர் அளவிற்க்கு (அ)சுத்தம் இல்லை.

              ஒரு வழியாக சென்னை வந்து தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினோம். சுமார் 600 பேர் பயணம் செய்யக்கூடிய அந்த விமானம் மிகவும் அமைதியாக பறந்து எங்களது பயணத்தை இனிமையாக்கியது. ஒரு வழியாக பாங்காங்க் விமான நிலையம் போய் சேர்ந்தோம்.

          அது மிகவும் சுத்தமாகவும் நவீனமாகவும் கண்ணைகவரும் விதத்தில் இருந்தது.  இமிகிரேசனில் ஒரு form  நிரப்பி கொடுக்க சொன்னார்கள். நானும்  bank exam எழுதுகிற மாதிரி தெரிந்ததை டிக் செய்து கொடுத்தேன். இம்மிகிரேசன் ஆபிசர் கொடுத்த வேகத்தில் திருப்பி கொடுத்து என்னவோ சொன்னார். நான் நிரப்பியது சரியில்லை என்று மட்டும் புரிந்தது. வழக்கம் போல் அருகில் இருந்த ஒருவரை காப்பி செய்துதான் வெளியேற முடிந்தது.

இவர்தான் Mr.yoyo.
நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்
          அங்கிருந்து ஒரு guide  Mr. yoyo( யோவ்......யோவ் .... னு கூப்பிட்டாலும் சரிதான்)  TIGER ZOO  வுக்கு காலை உணவு உண்ண அழைத்துச்சென்றார். நமக்கும் உணவா அல்லது நாம் டைகருக்கு உணவா என்ற டவுட் உங்களைப்போல் எனக்கும் வராமல் இல்லை. புலிகள் இருக்கும் இடத்தில் காலை உணவை முடித்துக்கொண்டுஹோட்டலை நோக்கி  கிளம்பினோம்.

         
    ஹோட்டலில் குளித்து  ஃப்ரஷ் ஆகி  ALCAZAR SHOW வுக்கு செல்லலாம் என்றார்கள்.  என் நண்பன் அது காபரே டான்ஸ் என்று என் காதில் முணுமுணுத்தான். எதுவென்றாலும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற மூடில் எல்லோரும் கிளம்பினோம்.  அந்த நடன நிகழ்ச்சியும் ஆபாசமில்லாமல் எல்லோரும் குடும்பத்துடன் வந்து கண்டு ரசிக்கும் படிதான் இருந்தது.(நான் நினைத்து இல்லை என்று நீங்கள் வருத்தப்படுவது புரிகிறது )

                     இந்த நடன நிகழ்ச்சியில் நடன அசைவுகள், ஒளி அமைப்புகள் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் எங்களை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த நடன கலைஞர்கள் வெளியே வந்து நம்முடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர் (எல்லாம் பணம்தான்)

அவர்களுடன் போட்டோ எடுக்க விரும்புவர்கள்  பணம் கொடுத்துபடம்
 எடுத்துக்கொள்ளலாம்.
            அடுத்த நாள் coral island , speed boat ல் செல்ல இருப்பதாக சொன்னதால் மகிழ்ச்சியோடு உறங்கினோம். மறுநாள் காலையில் காலை உணவை முடித்துக்கொண்டு முதலில் பாரா கிளைடிங் செய்ய அதிவிரைவு படகில் கிளம்பினோம்.

பறக்க ரெடி
              ஆழ்கடலில் பெரிய படகை நிறுத்திவைத்து அதிலிருந்து நம்மை ஒரு பாராசூட்டில் மாட்டிவிட்டு அதிவிரைவு படகால் இழுத்து ஒரு பெரிய வட்டமடிக்கிரார்கள். அதனிடையில் ஒரு டிப்பும்( தண்ணீரில் முக்கி எடுத்தல்) உண்டு.
         
நானே தான் நம்புங்க
              ஒரு வழியாக பாராகிளைடிங்கில் பறந்து  பறவை தன் கண்ணால் பார்ப்பது போல் அந்த சிட்டியை உயர பறந்து கொண்டே ரசித்தேன். அதன் பிறகு coral island ஐ நோக்கி கிளம்பினோம்.

                அங்கே sea walk  கடலுக்கு அடியில் நடக்கும் ஒரு விளையாட்டும் water bike riding   போன்ற நல்ல விளையாட்டுகள் இருக்கிறது. அந்த கடற்கரையில் ஏராளமான மீன்கள் உள்ளன.  இவ்வளவு அழகான மீன்களை  கரையில் பார்ப்பது அரிது.

           
            இதை முடித்துவிட்டு  நானும் என் நண்பரும் ஹோட்டல் திரும்பினோம். ஆனால் மற்ற நண்பர்கள் இரவு நடைபயணம் செல்ல இருப்பதாக தெரிவித்தனர். அதன் அர்த்தம்(bhoom ..bhoom) எங்களுக்கு புரியவே நம்ம பூம்.. பூம்.. மாடு மாதிரி தலையசைத்து  நாங்கள் கழண்டு கொண்டோம்.

     மறுநாள் காலையில் அவர்கள் நேற்று இரவு தான் அனுபவித்த மகிழ்ச்சியை விளம்பி கொண்டிருந்தார்கள். மசாஜ் என்ற பெயரில் தொடங்கும் நிகழ்ச்சி “அதில்” போய்தான் முடியுமாம். நமக்கு  கூழானாலும்(???????) வீட்டு சாப்பாடுதான். வெளியே சாப்பிடுவதில்லை(!!!!!!!!!!!) என்பதை கொள்கையாக வைத்திருப்பதால் இதெல்லாம் பெரிய மேட்டராக தெரியவில்லை.

கடைசியாக நம் இந்தியர்கள் வைத்திருக்கும் இந்திரா மார்கெட்டிலும், மற்றும் big C - லும் பொருட்களை வாங்கிக்கொண்டு  மகிழ்ச்சியோடு பயணித்தோம். இந்தியகர்கள் ஹோட்டல் தொழிலிலும் மற்றும் மற்ற வியாபாரத்திலும் கொடிகட்டி பறக்கின்றனர். நம் நாட்டைவிட LED TV க்கள் விலை மலிவாக இருக்கிறது. வருவோர் எல்லோர் கையிலும் அதை காணமுடிகிறது.

நாமும் அவர்களை நம்பித்தான் போகவேண்டியிருக்கிறது. இந்தியர்களை இன்முகத்துடன் வரவேற்க்கிறார்கள். பணம் இருந்தால் சபலிஸ்டுகளுக்கு பாட்டாயா சிட்டி சொர்க்க பூமிதான்.

அங்குள்ள மனிதர்களைப்போல் முட்டையும் கலர்ஃபுல்லாகத்தான் இருக்கிறது.
        ஆனால் திரும்ப வந்த பிறகு நண்பர்களிடம் திட்டு வாங்கியது எனக்குதான் தெரியும். வெறும் மசாஜ் பண்ண வேண்டியது தானே நீயெல்லாம் போனதே வேஸ்ட் என்றான் சதிகாரன். இருந்தாலும்  கற்ப்பை காப்பாற்றிய மகிழ்ச்சியில் நானும், வெளியில் சொல்லிவிடுவானோ என்று அவர்களும்  இருப்பதுதான் வேடிக்கை.

Wednesday, August 3, 2011

நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு - ஆபீஸர் அதிரடி.

 இடமிருந்து வலம் ரூபினா மேடம்(நாய்குட்டி மனசு),கெளசல்யா மேடம்(மனதோடு மட்டும்),சகாதேவன் ஐயா(வெடிவால்),ஞானேந்திரன்(யானைக்குட்டி),டைரக்டர்.செல்வகுமார்(selva speaking),சீனா ஐயா(வலைச்சரம்),சங்கரலிங்கம் ஐயா(உணவு உலகம்)
நேற்று நெல்லையில் ஒரு அதிரடி பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதாக ஆபீஸர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் அழைப்பு விடுத்தார். அதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் திரு.செல்வகுமார் அவர்கள்  பங்கேற்க்க இருப்பதாகவும் சொன்னார்கள். ஏற்கனவே பிரமாண்டமாக நடந்த முதல் பதிவர் சந்திப்பில்   நான் பங்கேற்க்க முடியாத வருத்தம் இன்னும் இழையோடிக்க்கொண்டிருப்பதாலும் இன்னும் மிக முக்கியமான நட்சத்திர பதிவர்கள் வருகிறார்கள் என்று சொன்னதாலும் உடனடியாக செல்ல முடிவெடுத்தேன். அதன் படி நெல்லை போய் சேர்ந்தேன். மிகவும் சரியான நேரத்திற்க்கு வந்துசேர்ந்தது சீனா ஐயா தான்( அதிக தொலைவில் இருந்து வந்தவரும் அவர்தான்)

               பின்னர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர இனிதாக களைகட்ட ஆரம்பித்தது பதிவர் சந்திப்பு .  திவானந்தா சுவாமிகள் தன்னுடைய குளுகுளு அறையை அதற்க்காக ஒதுக்கி கொடுத்தது இன்னும் மகிழ்ச்சியூட்டியது. சின்னத்திரையில் பல வண்ணக்கோலங்கள் படைத்த   டைரக்டர் செல்வகுமார் தன்னை  அறிமுகப்படுத்திக்கொண்டார் கூடவே நாங்களும்.

இயக்குனர் செல்வ குமாருடன் கே.ஆர்.விஜயன்(நினைவில் நின்றவை)
                பிறகு அவரே கதை வசனம் ஒளிப்பதிவு எல்லாம் செய்து உருவாக்கிய  “ யாதுமானவள்” என்ற குறும்படத்தை தன்னுடைய மடி கணினியில் காண்பித்தார். மிகவும் மனதை தொடுவாக இருந்த அதன் காட்சியமைப்பும், வசனங்களும் எல்லோரையும் அந்த கதையோடு ஒன்ற வைத்தது.  மேலும் அவர் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும் அதற்க்கான location  பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார்.
இடமிருந்து வலம் கெளசல்யா மேடத்தின் கணவர்(அஞ்சாநெஞ்சன்)  ,ராமலிங்கம் ஐயா(கருவாலி)
              வழக்கம்போல் கூட்டதை கலகலப்பாக்கிய திவானந்த சுவாமிகள் நோன்பு காரணமாக விடைபெற  நாங்களும் ஒவ்வோருவருடனும் பிரியா விடை பெற்றோம் மீண்டும் விரைவில் சந்திப்போம் என்ற உறுதியுடன்.