பின் தொடரரும் நண்பர்கள்

Friday, January 4, 2013

”நடுவுல கொஞ்சம் வாழ்க்கையக்காணோம்”

நேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின்  ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான,  அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது.  உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான்  சென்றேன் என்றார்.

                 பிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும்  சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இருக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார்.

                அவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மேற்படிப்புக்காக அவனை ஜெர்மனியில் MS  படிக்க வைக்க எனக்கு ஆசை. அவனுக்காக கல்விக்கடன்  வாங்கினேன் அதையும் இன்னும் ஓரிரு வருடத்தில் அடைத்துவிடுவேன் என்றார். எனக்கென்று பெரிய தேவைகள் இல்லை. சொந்த வீடு இருக்கிறது. பையனுக்கு இரண்டு பிளாட் வாங்கி போட்டுள்ளேன். ஒன்றை விற்றுக்கூட அவன் வீடு கட்டிக்கொள்ளலாம்.அது போக நான் என் மனைவி மற்றும் பையனுக்கு பெரிய தொகையில் காப்பீடு செய்துள்ளேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் 58 வயது ஆகும் போது 20000 ரூபாய் பென்சன் மாதிரி வருகிற மாதிரி தனித்தனியாக காப்பீடு செய்துள்ளேன். அதை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம். என் மனைவி கூட பணத்திற்காக என்னை எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. என் மகனுக்கும் அவன் பிள்ளை காலத்தில் 40 லட்ச ரூபாய் வருகிற மாதிரி காப்பீடு செய்துள்ளேன். அது அவன் பிள்ளைகளின் படிப்பிற்க்கு உதவும். நான் அவன் படிப்பிற்க்கு ஓடியமாதிரி அவன் கஷ்டப்படக்கூடாது  இல்லையா என்றார்.

                     ஆனால் நான் என் மகனிடம் எதையும் கேட்கவில்லை ஒன்றைத்தவிர. ஒரளவு உனக்கு நான் எல்லாம் செய்துவிட்டேன். நீயும் என்னை எதிர்பார்க்க வேண்டாம். நானும் பணத்திற்க்காக உன்னை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் நீ கண்டிப்பாக ஒரு ஏழைச்சிறுவனின் படிப்பை ஏற்று செய்ய வேண்டும் இது என் கண்டிப்பான ஆசை அதை செய்தே ஆக வேண்டும் என்றார்.

                       ஒருவர் தன் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாக வடிவமைத்து வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியமளித்தது. இது அனைவருக்கும் சாத்தியமாவது இல்லை என்றாலும் இயன்றவரை  இதைப்போல் நாமும் வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டால்  நம் குழந்தைகளும் நன்றாக இருக்கும் , குடும்பமும் நன்றாக இருக்கும்,சமுதாயமும் நன்றாக இருக்கும் . 

...................................................................வாழ்க வளமுடன்..........................................................