பின் தொடரரும் நண்பர்கள்

Thursday, July 25, 2013

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

தொ”டர்” பதிவு தொடரட்டும்...........பதிவுலகம் தழைக்கட்டும்

என் முதல் கணிணி அனுபவம் என்கிற தொடர்பதிவு  தொடர்வது போல் நானும்  பல தொடர் பதிவுகளை எழுதி பலரையும் கோர்த்துவிட விரும்புகிறேன்.....
தலையங்கள் நிறைய தேவைப்படுவதால்.... பதிவர்களின் உதவியை நாடுகிறேன்.....


உதாரணமாக................

1. என் முதல் காதல் அனுபவம்.....


2. என் முதல் திருட்டு.......


3. நான் செய்த தவறுகள்..... அன்று முதல் இன்றுவரை.


                     இதுமாதிரி உணர்வுப்பூர்வமான வில்லங்கமான தலையங்கங்கள் வரவேற்க்கப்படுகின்றன......

தன் பெயரை போட்டுவிடுவானோ என்று பீதியிலே பேதி போகிற மாதிரியான தலையங்கங்கள்  வாஞ்சையோடு பரிசீலிக்கப்படும்.

யோசிங்கப்பா.............யோசிங்க.


நுகர்வோருக்கும் வேண்டும் விழிப்புணர்வு.................இன்று ஒரு நண்பரை பார்க்க சென்றிருந்தேன்.  சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது .... போனவாரம் நீங்க முகநூலில் ஒருவருடன் (ஆபீசர் சங்கரலிங்கம் அவர்கள் ) இருக்கிறமாதிரி போட்டோ போட்டிருந்தீர்களே இவருக்கு அவர் நண்பரா என நண்பர்கள் கேட்டதாக கூறி ஒருமாதிரியாக சிரித்தார்.    நானும் அவர்களுக்கு நண்பர்தான் என்ன விஷயம் என்றேன் இல்லை சும்மாதான்  என்று சமாளித்தார்.  சும்மா சொல்லுங்கண்ணே நமக்குள் தானே என்றேன். அப்பொழுதுதான்  அவர் தன் மனக்கசப்பை கொட்ட துவங்கினார்.

                       
பாவப்பட்ட மக்களை எல்லாம் சோதனை என்ற பெயரில் துவம்சம் செய்கிறார்கள்,பல்காரங்களை ரோட்டில் கொட்டுகிறார்கள். அப்படியென்றால்  பெப்சியை தடை செய்ய வேண்டியதுதானே சீறினார் . அப்பாடா அப்படி வாங்க வழிக்கு என்று மனதிற்குள் நினைத்தவாரே நிலமையை விளக்க துவங்கினேன்.

                           முதலில் சுகாதாரம் என்ற விஷயத்தில் பாவம் பணக்காரன் என்ற பாகுபாடு ஒன்றும் சட்டத்திற்கு கிடையாது.  யார் தவறு செய்தாலும் சட்டத்திற்குட்பட்டுதான்  அரசு அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்கின்றனர். பாவப்பட்டவன் என்பதற்காக  அவன் கலப்படம் செய்வதை  அல்லது அடுத்தவன் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன..?

                           
அடுத்ததாக பெப்சி.....           பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளையும் மாதிரி எடுத்து இவர் அனுப்புகிறார் . ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கு சில நேரங்களில் நீதியை தாமதப்படுத்தவோ அல்லது தீர்ப்பை மாற்றவோ செய்யலாம். என்ன நடக்கிறது என்பதை விளக்க தேவையில்லை அது எல்லோரும் அறிந்த ரகசியம் தான்.  இவர் தன் அதிகார வரம்புக்குள்ளே இருந்து மட்டும்தான் செயல்பட முடியும். நீங்கள் நினைக்கிற அளவிற்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால்  அதையும் செய்வார்.  தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை எவ்வளவு இடையூறுகளுக்கிடையில் கனகச்சிதமாக செய்கிறார் என்பதை நான் அவருடன் இருந்த சில தருணங்களில் புரிந்துகொண்டேன். எவரையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் அப்பாவி மக்கள் சுகாதாரமற்ற பொருட்களை உட்கொண்டு இன்னலுக்கு ஆளாகாக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்  அரசின் சட்டத்தையே அவர் நடைமுறைப்படுத்துகிறார். அல்லாமல் பாவப்பட்டவர் /தனிநபர் மீது எந்தவித காழ்புணர்ச்சியோ அல்லது பன்னாட்டு கம்பனிகள் என்ற எந்த வித பாகுபாடோ அவருக்கு கிடையாது என்றேன்.

                             மேலும் அவர்  நாகர்கோவிலில் சில பெரிய ஹோட்டல்களின் பெயரை குறிப்பிட்டு இங்கே இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது என்று புகார் கொடுத்தும் ஒரு பயன் இல்லை. அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

                 நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரி மீது புகார் செய்யுங்கள்.....தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேளுங்கள்..... தகவல் கிடைக்கும். பிறரை குறைகூறுவதை விடுத்து ஆக்கபூர்வமாக சிந்தியுங்கள்.

       
         
                மேலும் ஆபீசர்(சங்கரலிங்கம் ராஜகோபால் அவர்கள்) பணிபுரிவது நெல்லையில் அவர் அதிகாரவரம்பிற்குள் மட்டுமே அவர் செயல்பட முடியும்...... இங்கே அதிகாரிகள் செயல்படவில்லை என்பதற்காக அவர் செய்வது தவறு என்று கூறுவது முதிர்ச்சியின்மையேயாகும். நாட்டுக்கு நல்லது செய்பவர்களை எங்கிருந்தாலும் ஊக்குவிக்க வேண்டும்..... செயல்படாதவர்களை தட்டிக்கேளுங்கள்...அப்பொழுதுதான் நாடு உருப்படும் என்றேன்.

                   பாவப்பட்டவன் என்கிறீர்கள். அவனிடம் பலதடவை எச்சரிக்கை விடுத்தும் கால அவகாசம் கொடுத்தும் அவன் திருந்தவில்லை எனும்போதுதான்  நடவடிக்கை எடுக்கப்படுகிறது.   ஒருதடவை நஷ்டம் ஏற்படும்போதுதான் அவனுக்கும் வலிக்கிறது.

             அன்று அதிகமான கடைகளில் திறந்த வெளியில் ஈ மொய்க்க விற்றுக்கொண்டிருந்த பஜ்ஜி பலகாரங்கள் அனைத்தும் இன்று கண்ணாடி குடுவைக்குள் இருப்பதை கண்ணாற  கண்டு மகிழ்கிறேன்.....வெறும் சட்டம் மட்டும் போட்டு பயன் இல்லை. அது சரியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். மக்களும் அதை மதிக்க வேண்டும். மதிக்காதவர்களை மதிக்கவைக்க வேண்டும் அதுதான் அதிகாரிகளின் கடமை. அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தத்தம் கடமைகளை ஒழுங்காக  செய்தால், மக்களும் தம் உரிமைகளையும் கேட்டு வாங்கி கடமைகளையும் ஒழுங்காக செய்தால் தான் நம் நாடு வளம் பெறும்.

                 சிறு நிகழ்வுகளை பெரிதுபடுத்தாதீர் அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.... தந்தை தன் மகனை தண்டிப்பது அவன் நாசமாய் போவதற்காக அல்ல. சில அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்பதற்காக நேர்மையான அதிகாரிகளை குற்றம் சொல்லாதீர்..... எல்லோரும் அப்படியே நேர்மையற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்....அது நீங்கள் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் செய்யும் பச்சைத் துரோகம்.

                   

Monday, July 22, 2013

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!


எனக்கு தமிழ்லயே பிடிக்காத வார்த்தை “தொடர்பதிவு”. ஏதோ வந்தோமா  ஏதாவது இரண்டு லைன் முகநூல்ல கிறுக்கினோமா போனோமான்னு இருக்கிற  என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்த மனோவை தனியாக கவனித்துக்கொல்கிறேன்.
                     பதிவு எழுதியே வருடங்கள் ஆகிப்போனதால் புதிய பதிவு எழுத எங்கே போகவேண்டும் என்று தேடவே நிறைய நேரம் ஆகிவிட்டது..... ஒரு வழியாக கண்டுபிடித்தும் தொலைத்தாகிவிட்டது. இனிவாயில் வந்ததை  வாந்தி எடுக்க வேண்டியதுதான் பாக்கி.
                    முதலில் நான் கணினி வாங்க காரணமே தொழில் ரீதியாக புதிதாக சந்தைக்கு வரும் கேமிரா மற்றும் அதன் உப பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வசதியாக இருக்குமே என்றுதான். அதற்காக இணைய இணைப்பும் எடுத்தேன். அப்பொழுதுதான் என் கடைக்கு அடுத்த கடையில் இருக்கும் ஹரீஸ் என்ற நண்பன் பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அது வால்பையன் மறைந்த நண்பர் பட்டாபட்டி மற்றும் பன்னிக்குட்டி ராமசாமி ஆகிய சீனியர் பதிவர் நண்பர்கள் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. இணைய இணைப்பு இருக்கிறது என்பதால்  சும்மா இருக்கின்ற நேரங்களில் அதில் மனதில் தோன்றியவற்றை கிறுக்க ஆரம்பித்தேன்... ஒரு காலகட்டத்தில் அந்த கிறுக்கல் கிறுக்காக மாறவே அதிலிருந்து கொஞ்சம் விலகி முகநூலில் அடியெடுத்து வைத்தேன்.
                              முகநூலில் ஒரு நிலைத்தகவல் போட அதிக நேரம் தேவையில்லை என்பதாலும்.....  முக்கியமாக  தொடர் பதிவு என்ற மிரட்டல் இல்லவே இல்லை என்பதாலும் ,அதிக புதிய நண்பர்கள் கிடைத்ததாலும்,நண்பர்களின் நேரடி தொடர்பு ஏற்படுவதாலும் பதிவுலகத்தை விட்டு மெதுவாக அந்நியப்பட துவங்கினேன். அந்த நேரத்தில் முகநூலும் மிகவும் பிடித்து போய்விடவே  அங்கேயே நேரத்தையும் எதிர்காலத்தையும் கொன்று கொண்டிக்கொண்டிருக்கும்  அந்த உன்னத நேரத்தில் தான் வந்தது  நாஞ்சில் மனோவின் இந்த ஒரு ”தொடர் பதிவின்” அழைப்பு.
Harish Durai Raj.(என்னை பதிவுலகத்திற்கு அறிமுகபடுத்தியவர்)

இதன் மூலம் பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்டிய நண்பர் நாஞ்சில் மனோவுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

                                    அண்ணன் திண்டுக்கல் தனபாலன் சொல்லாவிட்டால் இந்த அழைப்பு எனக்கு தெரியாமலேயே  போயிருக்கும். அந்த வகையில் அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். அது ஒருபுறம் இருக்க.... இது தொடர் பதிவு என்பதால் இன்னும்  தொடர வேண்டும் என்ற ஒரு மரபு இருப்பதால் ஒரே ஒரு நபரை மட்டும் தொடர அழைக்கிறேன்..... காரணம் எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் வட்டத்தை மனோவே அழைத்துவிட்டார். எனவே பதிவுலகில் இருந்தாலும் தற்போது தொடர்பில் இருக்கும்

தோழி  S.K. SELVI  யை மட்டும் தொடர அழைக்கிறேன்.

பதிவுலகத்திற்கு உயிர் கொடுக்க என்னால் இயன்ற முயற்சியை நானும் செய்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்.
                            

Friday, January 4, 2013

”நடுவுல கொஞ்சம் வாழ்க்கையக்காணோம்”

நேற்று தற்செயலாக வழியில் என் நண்பரை சந்தித்தேன். அவர் வட்டிகொடுக்கும் தொழில் செய்துவருகிறார். என்ன சார் கோவை சென்றதாக கேள்விப்பட்டேனே என்றேன். ஆமா விஜயன் கடந்த மூன்று வருடங்களாக புதுவருடத்தின் துவக்கம் ஜக்கி வாசுதேவின்  ஆசிரமத்தில்தான் என்றார். சில மாதங்களுக்கு முன்புதான் அவர்கள் வாயிலாக இமாலயம் சென்று வந்தார். மிகவும் முக்கியமான,  அனைவரும் பார்க்க வேண்டிய வித்தியாசமான இடம், பணம் இருந்தாலும் பார்த்திட முடியாது.  உடல் ஒத்துழைக்கும்போது பார்த்துவிடுவோம் என்றுதான்  சென்றேன் என்றார்.

                 பிறகு பேச்சு தொழிலைப்பற்றி திரும்பியது. இன்றைய காலகட்டத்தில் அது யாருடைய தொழிலாக இருந்தாலும்  சரி போட்டி மிகுதியால் லாபம் குறைந்துவிட்டது. பழைய மாதிரி ஓடியாடி வேலை செய்யும் வயதும் போய்விட்டது. அதனால் ஓரிரு வருடத்தில் இருக்கிற பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து நிம்மதியாக வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் என்றார்.

                அவருக்கு ஒரே பையன் தான் பொறியியல் படிக்கிறார். அடுத்து மேற்படிப்புக்காக அவனை ஜெர்மனியில் MS  படிக்க வைக்க எனக்கு ஆசை. அவனுக்காக கல்விக்கடன்  வாங்கினேன் அதையும் இன்னும் ஓரிரு வருடத்தில் அடைத்துவிடுவேன் என்றார். எனக்கென்று பெரிய தேவைகள் இல்லை. சொந்த வீடு இருக்கிறது. பையனுக்கு இரண்டு பிளாட் வாங்கி போட்டுள்ளேன். ஒன்றை விற்றுக்கூட அவன் வீடு கட்டிக்கொள்ளலாம்.அது போக நான் என் மனைவி மற்றும் பையனுக்கு பெரிய தொகையில் காப்பீடு செய்துள்ளேன். அதனால் எனக்கும் என் மனைவிக்கும் 58 வயது ஆகும் போது 20000 ரூபாய் பென்சன் மாதிரி வருகிற மாதிரி தனித்தனியாக காப்பீடு செய்துள்ளேன். அதை வைத்து காலத்தை ஓட்டிவிடலாம். என் மனைவி கூட பணத்திற்காக என்னை எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை. என் மகனுக்கும் அவன் பிள்ளை காலத்தில் 40 லட்ச ரூபாய் வருகிற மாதிரி காப்பீடு செய்துள்ளேன். அது அவன் பிள்ளைகளின் படிப்பிற்க்கு உதவும். நான் அவன் படிப்பிற்க்கு ஓடியமாதிரி அவன் கஷ்டப்படக்கூடாது  இல்லையா என்றார்.

                     ஆனால் நான் என் மகனிடம் எதையும் கேட்கவில்லை ஒன்றைத்தவிர. ஒரளவு உனக்கு நான் எல்லாம் செய்துவிட்டேன். நீயும் என்னை எதிர்பார்க்க வேண்டாம். நானும் பணத்திற்க்காக உன்னை எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆனால் நீ கண்டிப்பாக ஒரு ஏழைச்சிறுவனின் படிப்பை ஏற்று செய்ய வேண்டும் இது என் கண்டிப்பான ஆசை அதை செய்தே ஆக வேண்டும் என்றார்.

                       ஒருவர் தன் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாக வடிவமைத்து வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியமளித்தது. இது அனைவருக்கும் சாத்தியமாவது இல்லை என்றாலும் இயன்றவரை  இதைப்போல் நாமும் வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டால்  நம் குழந்தைகளும் நன்றாக இருக்கும் , குடும்பமும் நன்றாக இருக்கும்,சமுதாயமும் நன்றாக இருக்கும் . 

...................................................................வாழ்க வளமுடன்..........................................................

Thursday, November 8, 2012

விளம்பரம் என்னும் மாயஜாலம்


டிவியில் விளம்பர படம் பார்க்கும்போது அதன் பின்னால் இருக்கும் விளம்பர கம்பனியின் உழைப்பு நமக்கு தெரிவதில்லை. நானும் ஒரு காலத்தில் என் நண்பருடன் விளம்பர படம் எடுக்க போனதுண்டு( உப்புமா கம்பனிதான்).  அப்பொழுதுதான் அதிலுள்ள நுணுக்கங்களை கண்டு வியந்து போனேன். 

               முதலில் அந்த விளம்பரம் புக் செய்ய அந்த வாடிக்கையாளரை சோப்பு போடுவதில் இருந்து ஆரம்பிக்கிறது இதன் தொழில் நுட்பம்.  எல்லா வியாபாரிகளுக்கும் தன் விளம்பரத்தை டிவியில் காண ஆசை இருக்கும். ஆனால் அதன் செலவை (சன் டிவி ரேஞ்சுக்கு) அதிகமாக கற்பனை பண்ணி வைத்திருப்பதால் அதை பற்றி ஆலோசிப்பதில்லை. ஆனால் அந்த இடத்தில் தான் நாங்கள் நிற்கிறோம்.... மிகவும் குறைந்த செலவில் அதை எடுத்து ( அதற்க்கென்று ஒரு டூபாக்கூர் கான்செப்ட் உருவாக்கி)  கொடுத்து அவர்களின் கனவை நனவாக்குகிறோம். அந்த விளம்பரம் அகில உலகமெங்கும் வரும் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிக்கும் வேளையில்   அவர்கள் கேபிள் டிவி ஏரியாவையே  தாண்டாது என்பது எங்களுக்கு பணம் செட்டில் செய்த பிற்பாடுதான் அவர்களுக்கு தெரியும்.

                  விளம்பரம் செய்வதனால் என்ன பயன் என்று விளக்குவதோடு நின்றுவிடாமல் விளம்பரம் டிவியில் வந்த பிறகு நாங்களே ஆள் வைத்து (கொஞ்சம் பணம் செலவானாலும்) போன் செய்து விசாரிக்கும் அந்த தொண்டு இருக்கிறதே அதில் தான் அவர் வீழ்ந்து போவார். அடடா விளம்பரம் செய்த உடனேயே இவ்வளவு ரெஸ்பான்ஸா ...........? அதனால்தான் பெரிய கம்பனிகள் வாரிக்குவிக்கின்றன என்று எண்ணுவார். ஆனால் எங்களுடைய  விசாரிப்புகள்  நாங்கள் பணம் வாங்கும் வரை தான். மேலும் அந்த என்கொயரியால் ஒரு பைசாவிற்க்கு அவருக்கு வியாபாரம் விற்க்கப்போவதில்லை. ஆனால் இதையெல்லாம் தாண்டி அவருடைய பொருள் விற்க்கிறது என்றால் உண்மையிலேயே அவருக்கு மச்சம் இருக்க வேண்டும் அல்லது அவருடைய பொருள் தரமாக இருந்திருக்க வேண்டும்.

               இதில் நடிப்பதற்க்கென்று வரும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பண்ணும் அலம்பல்களை பற்றி எழுத தனி பதிவே எழுத வேண்டும். அவ்வளவு டார்ச்சர் பண்ணுவார்கள்.  நாம் நினைக்கும் அவுட்புட்டை அவர்களிடம் வாங்குமுன் நமக்கு உயிரே போய்விடும். 
       
டிவியில் வந்தால் அந்த பொருள் தரமானதாகத்தான்  இருக்கும் என்று மக்கள் நம்பும் வரை எங்கள் தொழிலும் நடக்கும் அவர்கள் தொழிலும் நடக்கும்  அனைவருடைய வாழ்வும் சிறக்கும்.

           

Tuesday, October 9, 2012

பாருங்க... பாருங்க நானும் ரவுடி தான்..........


போன வாரம் சீரடி சாயி பாபா கோவிலுக்கு போய் வரும்பொழுது நடந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதை உங்களுக்கும்  தெரிவிப்பதே இந்த பதிவின் நோக்கம்.........

                    வாரம் ஒரு முறை சென்னையில் இருந்து ஒரு இரயில் வண்டி சீரடிக்கு செல்கிறது. அதில் செல்பவர்கள் அநேகமாக சாயிபாபாவின் பக்தர்கள் தான்.  அனைவரும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதால் பாடல் மற்றும் பஜனைகள் களைகட்டும். நாங்களும் நன்றாக பிரயாணத்தை ரசித்து ருசித்து மகிழ்ந்து சென்றோம். இனிமையாக தரினத்தை முடித்து இரயிலில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

டிக்கட் பரிசோதகரால்  நடுக்காட்டில் இறக்கிவிடப்பட்ட   குடும்பம்.

              இரண்டு பக்கமும் காட்சிகள் பச்சை பசேலென்று கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அதை ரசித்துக்கொண்டும் என்  கேமிராவினால் காட்சிகளை  பதிவு செய்து கொண்டும்  வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய இரயில் நிலையத்தில் இருந்து ஒரு  ஏழைக்குடும்பம் நாய் மற்றும் மூங்கில் கம்பு சகிதமாக ஏறியது. எனக்கு தெரிந்து அவர்களது மொத்த சொத்தும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். அந்த மூங்கில் கம்பு சிறிய கூடாரம் அமைக்க பயன்பட வேண்டும் என்பதே என் யூகம். வழக்கம் போல் டிக்கட் பரிசோதகர் வந்தார். சட்டம் தன் கடமையை செய்தது. நடுக்காட்டில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். என் மனது சிறிது வருந்தினாலும் டிக்கட் இல்லாமல் அதுவும் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறுவது என்பது சரியல்ல என்பதால் அது சரியாகவே பட்டது.


                  ஒரு அரைமணி நேர பிரயாணம் கழித்து  ஒரு  இரயில் நிலையத்தில் (கர்நாடகா) ஒரு பெருங்கூட்டம் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறி வலுக்கட்டாயமாக  அமர்ந்தது. நாம் நம்முடைய முன்பதிவு செய்யப்பட்ட இடம் வேறுயாரும் வர வழியில்லை என்ற நினைப்பில் அங்காங்கே  செல்போன்,கேமிரா மற்றும் பல பொருட்களை வெளியே வைத்திருந்தோம்.
இந்த திடீர் ஆக்கிரமிப்பால் எங்களால் அந்த பொருட்களை எடுக்கவும் வழியில்லை. அதனால் பாதுகாப்பு கருதி அந்த கூட்டத்திடம் வேறு பெட்டிக்கு போகுமாரும் இது முன் பதிவு செய்த பெட்டி என்று கூறியதும் தகாத வார்த்தையினால் திட்டினர். வேறு வழியில்லாமல்  அபாய சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினோம்.

                   அப்பொழுதுதான் எங்கிருந்தோ பரபரக்க டிக்கட் பரிசோதகர் ஓடோடி வந்தார். இந்த சம்பவத்தை சொன்னோம். அவர் கூறியது எங்களை திடுக்கிட வைத்தது. இங்கே இஸ்லாமியருக்கான ஒரு திருவிழா நடப்பதாகவும் அதனால் இன்றும் இவ்வளவு கூட்டம் என்றும் அடுத்த ஜங்ஷனில் அவர்கள் இறங்கிவிடுவார்கள் என்றும் கூறினார்.  ஒரு நபரிடம் கூட டிக்கட் இல்லை ஆனால் அதை ஒன்றும் கேட்க முடியாது இது இப்படித்தான் நீங்கள் தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றார் மிகுந்த படப்படப்புடன். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பொழுது அந்த இரயில் நிலையத்தில் இருந்து மப்டியில் வந்த இரயில் நிலைய போலீசார் அந்த நபர்களை கடுமையான சொற்களால்திட்டி விரட்டவே அவர்கள் ஒதுங்கி கொண்டனர். அந்த போலீசாரும் இறங்கினர்..இரயிலும் நகர்ந்தது......சிறிது நேரத்தில் அந்த கூட்டம் மீண்டும் வந்து சேர்ந்தது. தகராரை தொடர்ந்தனர்  நீ போலீஸ் இல்லை இரயில்வே மினிஸ்டரிடம் வேண்டுமானாலும் சொல் உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. அடுத்த ஸ்டேஷனில் அரை மணிநேரம் நிற்க்கும் அங்கே பார்த்துக்கொள்கிறோம் என்றனர். அதில் ஒருவன் மிகவும் தீவிரமாக செல்போனில் தொடர்பு கொண்டு வேறு நபர்களுடன் சம்பவத்தை விவரித்துக்கொண்டிருந்தான். நாங்கள் மொத்தம் ஏழுபேர்  சென்றிருந்தோம். அதில்  பலரும் அரசியலிலும் சட்ட துறையிலும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் தான். இருந்தாலும் அன்னிய இடத்தில் என்னதான் செய்துவிட முடியும். அதில் எனக்கும் எங்களை வழிநடத்தி சென்ற அந்த பிரம்மசாரிக்கும் மட்டுமே இந்தி தெரியும். மற்றவர்களுக்கு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. எனக்கு அடுத்த ஸ்டேஷனில் ஏதோ விபரீதம் நடக்க இருப்பது புரிந்ததால் நானும் என்னுடன் வந்த (அவர் உச்ச நீதிமன்ற வக்கீல்) நண்பருடன் இரயிலில் இருக்கும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று நடந்தோம். என்னுடன் வந்த வக்கீல் கட்டையாக முடி வெட்டியிருந்ததால் (போலீஸ் என்று நினைத்து) அவர்கள் எங்களை பார்த்ததும் கலவரமானார்கள். காரணம் அடுத்த ஸ்டேசனில் இறங்க வேண்டும் என்பதால் ஒருவரும் டிக்கட் எடுக்கவில்லை.அதில் பெரும்பாலானவர்கள் குடும்பம் சகிதமாக (பர்தா அணிந்து) இருந்தனர். எங்களது மனநிலையும் திக் திக் என்று இருந்தபோதும்  ஏசி பெட்டியை  அடைந்து ஏசி அட்டெண்டரிடம் போலீசை பற்றி விசாரித்தோம்.  அவன் இந்த இரயிலில் RPF போலீஸ் கிடையாது ஏன் ஏதாவது பிரச்சனையா  என்றனர். ஆனால் அங்கேயும் இதே கூட்டம் நின்றது அதனால் எங்களால் எதையும் சொல்ல முடியாமல் திரும்பிக்கொண்டிருந்த போதே அந்த ஸ்டேஷனும் (WADI) வந்தது. அங்கிருந்த படியே 100 க்கு மொபைலில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம். அவர்களும் அந்த் ஸ்டேசன் போலீசுக்கு தகவல் கூறுவதாக கூறினர்

                        அந்த கூட்டம் அப்படியே வெளியே இறங்கி எங்கள் ஜன்னலருகே வந்து மிக மோசமான வார்த்தையால் திட்டத்துவங்கினர். எமர்ஜன்சி எக்சிட்  (Emergency exit) எங்கள் பக்கம் இருந்ததால் ஜன்னலில் கம்பியே இல்லை. நேரம் செல்ல செல்ல கூட்டம் கூடியது. கையில் கிடைத்த பொருட்களை கொண்டு எறிய ஆரம்பித்தனர். அதுவரை இந்தியனாக இருந்த நாங்கள் அவர்களால் இந்துவாக சித்தரிக்கப்பட்டோம். சம்பவம் திரித்து கூறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆவேசமாக நாங்கள் உண்ண வைத்திருந்த வாழைப்பழத்தையும் உணவையும் எடுத்து எங்கள் மீதே எறிந்தனர். எங்கள் சக பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.  எங்களிடம் ஜன்னல் ஷட்டரை போடுமாறு கூறினர். நாங்களும் அப்படியே செய்தோம். அவர்கள் அந்த ஷட்டரை ஆக்ரோஷமாக தாக்கியதில் அதுவும் உடைந்து தொங்கியது. கூட்டத்தில் ஒருவனின் கையிலும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அப்பொழுது 2 வயதான இரயில்வே போலீசும் வந்து சேர்ந்தார். அவர்கள் அந்த கும்பலிடம் கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவரும் கேட்பதாக இல்லை. சிறிது நேரத்தில் கும்பல் தகாத வார்த்தையால் சத்தமிட்டவாரே பெட்டிக்குள் நுழைய துவங்கியது. போலீசாரும் அவர்களை தடுத்தனர். நானும் அவர்களை வரவிடாமல் தடுத்தேன். ஒரு வழியாக இரயில் நகர துவங்கியது.......அவர்களும் அந்த பெட்டியை தாக்கியவாரும்..... தகாத வார்த்தையால் திட்டியவாரும் கொஞ்சநேரம் இரயில் வேகத்திற்க்கு ஈடு கொடுத்தனர்..... இரயில் வேகமெடுக்கவே  பதட்டம் தணிந்தது.

இதில் என் மனதில் தோன்றிய சில நியாயமான கேள்விகள்......

1. முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பிறர் ஏறி அராஜகம் பண்ணுவது சரியா.

2. ஒரு பாவப்பட்ட குடும்பத்தை இறக்கிவிட்ட டிக்கட் பரிசோதகர் இவர்களிடம்  பயந்தது ஏன்..?
3. இரயில் பெட்டியின் ஷட்டரை அவர்கள் நொறுக்கியும் இரயில் நிலைய போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.?

4. இதெல்லாம் சின்ன மேட்டர் இதற்க்கெல்லாம் யாராவது அபாய சங்கிலியை இழுப்பார்களா என்று கருதியிருந்தால் எங்களிடம் அபராதம் வசூலிக்காதது ஏன்..?
5. சிறுபான்மையினர்  எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறும் அளவிற்க்கு அவர்களை சட்டத்தின் அப்பாற்பட்டவர்களாக கருத வைத்து பாதுகாப்பது யார்...?

டிக்கட் பரிசோதகரும், இரயில்வே போலீசாரும் தம் கடமைகளை உணர்ந்து பொறுப்பாக நடந்தால் இதெல்லாம் நடக்குமா...

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் இரயிலில் இரயில்வே போலீசார் மிகவும் கண்டிப்புடன் அனைத்து இட்லி மற்றும் டீ வியாபாரிகளிடம் 20 ரூபாய் வீதம் வசூலித்துக்கொண்டிருந்ததை கண் கூடாக பார்த்தேன். ஒரு வேளை அரசாங்கம் இவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லையோ என்னவோ...?


 எது எப்படியோ இது போன்ற சிறு சிறு பிரச்சனைகள் தான் மிகப்பெரிய சம்பவமாக மாறும். மாறியிருக்கிறது.  அவரவர் இடத்தில் எல்லோரும் பெரியவரே. யாரோ செய்த தவறுக்கு யாரோ தண்டனை பெறுவது  உலகத்திற்க்கு ஒன்றும் புதிதல்லவே......

 ஆனால் ஒன்று அராஜகம் அழிந்தே தீரும். ஆதலினால்தான்  அகிலம் முழுவதும் அல்லல் படுகிறீர்கள்.ஆனால் அதில் அப்பாவிகள் பாதிக்கப்படும்போது யாராக இருந்தாலும் நமக்கும் வலிக்கவே செய்கிறது.