இனி மேட்டருக்கு வருவோம்
இது ஆடி மாசம் ஆஃபர்களுக்கு பஞ்சமில்லாத காலம். வசந்த் அன் கோவில் பொருள் வாங்கினால் 41 கார் உட்பட ஏராளமான பரிசு பொருட்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு தினுசாக ஆஃபர்கள் இருக்கும். ஆனால் இந்த பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று யாரும் பொருட்கள் வாங்குவது கிடையாது. தேவையான பொருளை வாங்கி விட்டு போகிற போக்கில் பரிசு கூப்பனை நிரப்பி பெட்டியில் நிராசையுடன் போட்டுவிட்டு வருவதுதான் வழக்கம். ...அப்புறம் யாருக்கு என்ன பரிசு விழுந்தது என்று நாம் கேட்பதும் இல்லை. நமக்கு பரிசு விழுந்ததாக அவர்கள் சொல்லப்போவதும் இல்லை. எப்பொழுதாவது அக்கடைக்கு போகும் பொழுது பரிசு வாங்கியவர்களின் படங்களை ஒட்டி வைத்திருப்பார்கள் நாமும் அதை பெருமூச்சுடன் பார்த்து நகர்வோம். இதுதான் வாடிக்கை அப்படித்தானே..
ஆனால் நான் ஒவ்வொரு தடவையும் பரிசு கூப்பனை நிரப்பும் போது மிகுந்த நம்பிக்கையுடன் நிரப்புவது வழக்கம். அப்புறம் அந்த கூப்பனை மிகுந்த சிரத்தையுடன் குலுக்கல் வரை பாதுகாத்து வருவேன்...ஆனால் இதுவரை ஒரு குண்டூசி கூட பரிசாக கிடைத்ததில்லை.
என் மனைவிக்கு இம்மாதிரி நம்பிக்கை எதுவும் கிடையாது. ஆனால் அதிர்ஷ்டம் அங்கேதான் குடியிருக்கும் போலும். வழக்கம்போல பள்ளி விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு சென்ற போது ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்க சென்றபோது பரிசு கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்... மனைவி உட்பட உடன் சென்ற நாலு பேரும் தத்தம் பெயர்களில் கூப்பனை நிரப்பி கொடுத்து வந்தார்கள்... வீட்டில் வந்து துணியை பிரித்த கையோடும் பில்லும் கூப்பனும் வழக்கம்போல் கவருடன் குப்பைக் கூடைக்கு சென்றது.அங்கே தான் விதி விளையாடியது.
ஒரு மாதம் கழித்து என் மனைவிக்கு ஒரு கார் பரிசு விழுந்ததாக செய்தி வந்தது. அதுவும் வீட்டுக்கே வந்து சொன்னார்கள். காரணம் கூப்பனில் எழுதிக் கொடுத்த போன் நம்பர் கூட பழுதாகிப்போனது. மேலும் கையில் கூப்பனும் இல்லை. வாங்கிய பில்லும் இல்லை என்றாலும் வருவது வழியில் தங்காது என்பார்கள்... பொதுவாக எனக்கெல்லாம் அது கெட்ட விஷயத்தில் தான் நடக்கும். ஆனால் முதன்முறையாக நல்ல விஷயத்தில் வர வேண்டியது வழியில் தங்காமல் வந்து சேர்ந்தது. எல்லாம் இறைவன் செயல். ஆம் அது கடவுளின் விருப்பம்.
Comments