திகார் ஜெயில்...
ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன்....? உலகத்தை கூட திரும்பி பார்க்கவைத்துள்ளது. எத்தனை பூஜ்யம் போட்டு எப்படி எண்ணுவது ? என்று எண்ணிப்பார்த்து மலைக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. கலைஞர் டி.வி யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், அரிநாயர்(ரிலையன்ஸ்) கரீம் மொரானி(சினியுக் பிசினஸ்) வினோத் கோயங்கா, ஷாகித் பல்வா,ஆசிப் பல்வா(சுவான்), தொலைத்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ராசா உதவியாளர் சந்தோலியா விளையாட்டு ஊழலில் சிக்கிய முன்னாள் மத்தியமநதிரி சுரேஷ் கல்மாடி உள்பட பலர் திகார் ஜெயிலுக்குள் அடைப்பட்டு கிடக்கிறார்கள்.
ஆ. ராசா 140 நாட்களை கடந்துவிட்டார். கனிமொழி யும் 40 நாட்களை ஜெயிலில் கழித்துவிட்டர். இவர்களில் யாருக்கும் இப்போதைக்கு ஜாமீன் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு கீழ் கோர்ட்டை அணுகுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுத்தியலை ஓங்கி அடித்து விட்டது.
இன்னும் எத்தனை நாளைக்கு இவர்கள் ஜெயிலில் இருப்பார்கள்?.அனுமார் வாலைப்போல் அடுத்து யார்.? என்று நீண்டு கொண்டே செல்வதால் 2ஜி வழக்கில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கலாவது எப்போது என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை.அதுவரைக்கும் இவர்கள் பெயிலைப்பற்றி யோசிக்காமல் ஜெயிலில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சரி இது இவர்கள் வழக்கு ! மும்பை டி.வி தயாரிப்பாளர கொலை வழக்கில் கன்னட நடிகை மரியாவுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. ஆனால் 3 ஆண்டுகளாக மரியா ஜாமீன் கிடைக்காமல் ஜெயிலிலெயே இருந்துள்ளார். தற்போது 3 ஆண்டுகளை ஜெயிலில் கழித்துவிட்டதால் மரியா விடுதலை ஆகி இருக்கிறார். ஒரு வேளை கோர்ட்டு மரியாவுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து இருந்தால் அநியாயமாக ஒரு ஆண்டு கூடுதலாக ஜெயிலில் இருந்திருப்பாரே என்ற கேள்வி எல்லோரிடமும் எழுவது நியாயம் தான்.
ஜெயில் தண்டனை அறிவிப்பதற்க்கு முன்பு எத்தனை நாள் பெயில் இல்லாமல் ஜெயிலில் இருப்பது? இந்த நடைமுறை சரிதானா? கோர்ட்டு எந்த அடிப்படையில் இந்த வழக்குகளை அணுகுகிறது. இது பற்றி ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது. :-
குற்றத்தின் தன்மையை பொறுத்தும் , குற்றம் சாட்டப்பட்டவரின் செல்வாக்கு. பின்னணி மற்றும் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜாமீன் மனுவை பரிசீலிப்பார்கள். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டவரை வெளியே விட்டால் வழக்கை எந்த வகையில் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்வார்கள்.
கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் சிலர் வழக்கு முடியும் வரை சுமார் 7 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். பொதுவாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுபவர்களை வெளியே விட்டால் சாட்சிகளை மிரட்டுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்பதால் தான் குற்றப்பத்திரிகை தயாரித்து தாக்கல் செய்யும் வரை ஜாமீனில் விட மாட்டார்கள். 2ஜி வழக்கை பொறுத்தவரை தனிப்பட்ட நபருக்கோ,நிறுவனத்திற்க்கோ ஏற்ப்பட்ட சாதாரண இழப்பாக கோர்ட்டு எடுத்துக்கொள்ளாது. ஒட்டு மொத்த நாட்டின் பிரச்சனை. எனவே சுப்ரீம் கோர்டு நேரடியாக கண்காணிக்கிறது. வெளிநாடுகளில் கூட விசாரணை நடப்பதாக் சொல்கிறார்கள். எனவே இன்னும் அதிக குற்றப்பத்திரிகையை கோர்ட்டு எதிர்பார்க்கலாம். குற்றத்தின் தன்மை கருதி தீர்ப்பு வழங்கப்படும் வரையில் கூட கோர்ட்டு ஜாமீன் வழங்காமல் இருக்க முடியும்.
ஒருவர் தண்டனை காலத்தைவிட கூடுதலாக ஜெயிலில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்க்கு எந்தவித நிவாரணத்துக்கும் சட்டத்தில் இடமில்லை.. விடுதலை செய்யப்படும்போது கூட அவர் குற்றவாளி இல்லை என்று கோர்ட்டு சொல்லாது.சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க தவறியதால் விடுதலை செய்யப்படுவதாகத்தான் கோர்ட்டு கூறும். இதன் மூலம் விடுதலை செய்யப்பட்டவர் குற்றமே செய்யாதவர் என்று அர்த்தமாகாது.
நன்றி: மாலைமலர்
Comments
பகிர்வுக்கு நன்றி...
http://anubhudhi.blogspot.com/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி ஆசிரியரே.